கடந்த 2023ம் ஆண்டு அக்.7ம் தேதி இஸ்ரேல் மீது ஹமாஸ் தாக்குதல் நடத்தியது. இதற்கு காரணம் பிரதமர் நெதன்யாகுதான் என்று அந்நாட்டின் பாதுகாப்பு ஏஜென்சியான ஷின் பெட் (Shin Bet) குற்றம்சாட்டியுள்ளது.
சொந்த நாட்டின் பிரதமர் மீதே அந்நாட்டின் பாதுகாப்பு ஏஜென்சி சரமாரியாக குற்றச்சாட்டுகளை முன்வைத்திருப்பது இஸ்ரேல் மட்டுமல்லாது சர்வதேச அளவிலும் விவாதங்களை கிளப்பியுள்ளது.
ஷின் பெட் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது, “அக்.7 தாக்குதல் குறித்து முன்பே ஓரளவு கணிக்க முடிந்திருந்தாலும், அதை தடுக்க போதுமான நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை. தாக்குதலின் அளவு, நேரம் மற்றும் திடீர் தாக்குதலின் இடத்தை சரியாக கணிக்க முடியவில்லை என்பதை ஒப்புக்கொள்கிறோம். பிரதமர் நெதன்யாகு தலைமையிலான இஸ்ரேலிய அரசின் ‘Policy of Quiet’ எனும் கொள்கை இந்த தாக்குதலுக்கு காரணமாக இருந்திருக்கிறது. ஹமாஸின் ஆயுத வளர்ச்சியை கட்டுப்படுத்த இந்த கொள்கை தவறிவிட்டது.
நாங்கள் பாதுகாப்பு தொடர்பான தகவல்களை எச்சரிக்கையாக முன்கூட்டியே கொடுத்திருந்தும், முன்னெச்சரிக்கையை இஸ்ரேலிய அரசு செய்யாதது தாக்குதலை சாத்தியமாக்கியது. எங்களுக்கும் இஸ்ரேலிய ராணுவ புலனாய்வுக்கும் இடையே ஒத்துழைப்பு குறைந்து இருந்ததும் தாக்குதலுக்கு காரணமாகும்.
அரசியல் குழப்பங்கள் இந்த தாக்குதலை சாத்தியமாக்கியதில் முக்கிய பங்கு வகித்திருக்கின்றன. பிரதமர் நெதன்யாகு, எங்கள் (Shin Bet) தலைவர் ரோனென் பாரை பதவியிலிருந்து தூக்கியடிக்க முயன்றார். உளவுத்துறையிலும் இதே கதைதான் நடந்தது. இந்த குழப்பங்களுக்கு மத்தியில் எதிரியின் தாக்குதலை நாம் கவனிக்க தவறிவிட்டோம்” என்று அடுக்கடுக்கான புகார்களை Shin Bet முன்வைத்திருக்கிறது.