மத்திய பிரதேச மாநிலத்தில் மனைவியை கொன்றுவிட்டு இளைஞர் ஒருவர் தற்கொலை செய்தார். அந்த இளைஞரின் உடல் தீவைத்து எரிக்கப்பட்டபோது அவரது பிரிவை தாங்க முடியாத தாத்தா அந்த தீயில் குதித்து உயிர்மாய்த்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
முன்னொரு காலத்தில் கணவன் முன்கூட்டி இறக்கும்போது அவரது உடல் எரியூட்டப்படும் போது மனைவியும் அதில் விழுந்து இறக்கும் வழக்கம் இருந்தது. ஆனால் தற்போது உடன்கட்டை ஏறும் வழக்கம் ஒழிக்கப்பட்டு விட்டது. ஆனாலும் கூட மத்திய பிரதேசத்தில் உடன்கட்டை ஏறும் வழக்கத்தை போல் நடந்த இச் சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியடைய செய்துள்ளது.
மத்திய பிரதேச மாநிலம் சிதி மாவட்டம் பஹ்ரி போலீஸ் எல்லைக்குட்பட்ட சிகோலியா கிராமத்தை சேர்ந்தவர் அபய் ராஜ் யாதவ். திருமணம் ஆனவர். இவரது மனைவி பெயர் சவிதா யாதவ். நேற்று முன்தினம் திடீரென்று வீட்டில் சவிதா யாதவ் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தார். அபய் ராஜ் தூக்கில் பிணமாக தொங்கினார். போலீசார் இருவரது உடலையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
விசாரணையின் போது மனைவி சவிதா யாதவை, கோடரியால் வெட்டி கொன்றுவிட்டு அபய் ராஜ் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளமை தெரிய வந்தது.
சவிதா யாதவ் மற்றும் அவரது கணவர் அபய் ராஜ் ஆகியோரின் இறுதிச் சடங்கின் போது பேரன் அபய் ராஜை நினைத்து அவரது தாத்தா ராமவதார் யாதவ் கதறி அழுது கொண்டிருந்தார். நேற்று முன்தினம் இரவில் திடீரென்று தாத்தா ராமவதார் யாதவ் வீட்டில் இருந்து மாயமானார். எங்கு தேடியும் கிடைக்காதமையால் சந்தேகம் அடைந்த குடும்பத்தினர் அபய் ராஜ் எரிக்கப்பட்ட இடத்துக்கு சென்று பார்த்த போது அபய் ராஜ் எரிக்கப்பட்ட இடத்தில் தாத்தா ராமவதார் யாதவின் உடல் பாதி எரிந்த நிலையில் கிடந்தது.
பேரன் அபய் ராஜின் பிரிவை தாங்க முடியாமல் அவரது சிதையில் குதித்து தாத்தா ராமவதார் யாதவ் தற்கொலை செய்தது தெரியவந்தது.