கனடாவின் மார்க்காம் பகுதியின், சோலஸ் சாலையில் வசித்து வந்த பெண்ணின் வீட்டின் மீது காலை 6:30 மணியளவில் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டுள்ளது. இதன் போது அவ் வீட்டில் வசித்து வந்த 20 வயதான இளம்பெண் மற்றும் 26 வயதான ஆண் ஒருவரும் காயமடைந்துள்ளனர்.
மருத்துவமனையில் சிகிற்சைக்காக அனுமதிக்கப்பட்ட போது அப் பெண் உயிரிழந்துள்ளார். காயமடைந்த ஆண் நபருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த துப்பாக்கிசூட்டில் வீட்டில் வளர்த்துவந்த நாயும் உயிரிழந்துள்ளது.
இந்த துப்பாக்கிசூட்டில் உயிரிழந்த பெண் இலங்கை யாழ்ப்பாணத்தை சேர்ந்த நிலாக்ஷி ரகுதாஸ் என அடையாளம் காணப்பட்டுள்ளது. இவர் யாழ்ப்பாண முன்னாள் மேயர் ஆல்பர்ட் துரையப்பாவின் பேத்தி என கூறப்படுகிறது.
இந்த துப்பாக்கி சூட்டில் ஈடுபட்டவர்கள் கெப் ரக வாகனத்தில் தப்பிச் செல்வது தொடர்பான சிசிடிவி காட்சியை காவல்துறையினர் வெளியிட்டுள்ளனர். அத்தோடு குறித்த வீட்டின் மீது கடந்த ஆண்டும் துப்பாக்கிசூடு நடத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது. இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
தற்போது வரை யாரும் கைது செய்யப்படாத நிலையில், காவல்துறையினர் தீவிர விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.