அநுராதபுர வைத்தியசாலையின் பெண் மருத்துவர் ஒருவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை கொடூரமான முறையில் தவறான நடத்தைக்குட்படுத்தப்பட்ட சம்பவம் நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் ஒருவன் முதலில் கைது செய்யப்பட்ட நிலையில், தற்போது மேலும் இருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சம்பவத்தின் போது, சந்தேக நபர் பெண் மருத்துவரை பாலியல் அத்துமீறலுக்கு உட்படுத்தியதுடன், அவரின் கையடக்க தொலைபேசியையும் பறித்துச் சென்றதாக கூறப்படுகிறது. மேலும், அவர் வைத்தியரின் தொலைபேசியில் வைத்தியரின் மிக மோசமான புகைப்படங்களை பதிவேற்றியதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது. தொலைபேசியின் கடவுச்சொல்லை பெறுவதற்காக பெண் வைத்தியரை மிரட்டியதாக விசாரணைகள் தெரிவிக்கின்றன.
சம்பவம் நடைபெற்ற 72 மணித்தியாலங்களுக்குப் பிறகே பிரதான சந்தேகநபர் கைது செய்யப்பட்டதால், இந்த இடைவெளியில் அவர் வைத்தியரின் புகைப்படங்களை யாருக்காவது பகிர்ந்திருக்க வாய்ப்பு உள்ளதா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இந்தக் குற்றச்செயலுக்கான மேலதிக விசாரணைகள் தற்போது பொலிஸாரால் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.