அமெரிக்காவில் பாலஸ்தீன ஆதரவு போராட்டங்களில் பங்கேற்றதற்காக மார்ச் 5 அன்று கொலம்பியா பல்கலைக்கழகத்தில் படிக்கும் இந்திய மாணவி ரஞ்சனி சீனிவாசன் என்பவரின் மாணவர் விசா ரத்து செய்யப்பட்டது. விசா ரத்து செய்ய்ப்பட்டதிலிருந்து சில நாட்களுக்குப் பின்பு அவர் தாமாகவே வெளியேறியுள்ளதாக ஜனாதிபதி ட்ரம்ப் நிர்வாகம் அறிவித்துள்ளது.
ரஞ்சனி சீனிவாசன் ஹமாஸ் என்ற பயங்கரவாத அமைப்பை ஆதரிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டார் என்றும், மார்ச் 11ம் திகதி அவர் தாமாகவே நாட்டை விட்டு வெளியேறியுள்ளார் என்றும் அமெரிக்க உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை காணொளி ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கும் முன்னர், நாட்டை விட்டு தாமாகவே வெளியேறுவது அமெரிக்க இராணுவ விமானத்தில் விலங்கிடப்பட்டு வலுக்கட்டாயமாக வெளியேற்றப்படும் அபாயத்தைத் தவிர்க்கிறது.
வன்முறை மற்றும் பயங்கரவாதத்தை ஆதரிக்கும்போது, அமெரிக்காவில் வசிக்கவும் படிக்கவும் வழங்கப்படும் சலுகையை ரத்து செய்ய அமெரிக்க நிர்வாகத்திற்கு உரிமை உண்டு என்றும் உள்நாட்டுப் பாதுகாப்புச் செயலாளர் கிறிஸ்டி நோயம் குறிப்பிட்டுள்ளார்.