அமெரிக்காவின் நியூயார்க் நகரில் வாஷிங்டன் அவென்யூ பகுதியில் டெஸ்லாவின் சைபர்டிரக் எனப்படும் மின்சாரத்தில் இயங்கும் வாகனத்தை ஓட்டிவந்த அவி பென் ஹமோ என்பவர் அதை சாலையோரம் நிறுத்திவிட்டு சென்றுள்ளார்.
அப்போது ஜப்பான் கார் தயாரிப்பு நிறுவனத்தின் வாகனமான சுபாருவில் வந்த மைக்கேல் லூயிஸ் (வயது 42), தன்னுடைய காரில் இருந்து கீழே இறங்கி சென்றார். மேலும் அந்த சைபர்டிரக் மீது ஸ்வஸ்திகா அடையாளம் ஒன்றை வரைந்து விட்டு சென்றார். இதனை கவனித்த டிரக் வாகன ஓட்டுநர் மைக்கேல் உடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
கடந்த சில வாரங்களுக்கு முன்னர், சைபர்டிரக் மீது முட்டை வீசப்பட்டது. மற்றொரு சம்பவத்தில், நாயின் கழிவு சைபர்டிரக் மீது பூசப்பட்டது. இந்நிலையில், ஸ்வஸ்திகா வரைந்த விவகாரம் 3-வது சம்பவம் ஆகும்.
இந்த சம்பவத்திற்கு டெஸ்லா நிறுவனத்தின் உரிமையாளரான எலான் மஸ்க் கண்டன பதிவை வெளியிட்டு உள்ளார். முட்டாள் மக்கள் என தெரிவித்ததுடன், சுபாரு தயாரிப்பு காரை அந்நபர் ஓட்டி வருகிறார், இயற்கையாகவே, அப்படிதான் இருக்கும் என்றும் சுபாரு நிறுவனத்தின் மீதும் தன்னுடைய வெறுப்பை வெளிப்படுத்தியுள்ளார்.