அழிக்கப்பட்ட கடற்படைக் கப்பல்களுக்கு அருகாமையில் அமெரிக்கக் கொடி போர்த்தப்பட்ட சவப்பெட்டிகள் மிதப்பதைப் போன்ற ஒரு அனிமேஷன் வீடியோவை ஏமனில் உள்ள ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் சமூக ஊடகங்களில் வெளியிட்டுள்ளமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், செங்கடல் பகுதியில் கப்பல் போக்குவரத்துக்கு எதிரான தாக்குதல்களுக்கு பதிலாக, ஈரானின் ஆதரவில் செயல்படும் ஏமனின் ஹவுத்தி கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக முழு அளவிலான இராணுவத் தாக்குதலை சனிக்கிழமை (15) ஆரம்பித்துள்ளார். அதற்கு ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் பழிவாங்குவதாக சபதம் செய்து, அதற்கான வீடியோக் காட்சியையும் வெளியிட்டுள்ளனர்.
அமெரிக்கத் தாக்குதல்கள் சவுதி அரேபியாவின் எல்லையிலுள்ள ஹவுத்தி கிளர்ச்சியாளர்களின் கோட்டையான ஏமனின் சாதா மாகாணத்திலும், தலைநகர் சனாவில் நடந்ததாக கூறப்படுகிறது. இந்த தாக்குதலில் பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட குறைந்தது 31 பேர் உயிரிழந்துள்ளனர், மேலும் 100க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர்.
ஞாயிற்றுக்கிழமை ஈரானும் ட்ரம்பின் எச்சரிக்கைக்கு பதிலளித்து ஹவுத்திகளுக்கு உதவ மறுத்தது. அதேவேளை ஈரானின் துணை இராணுவ புரட்சிகர காவல்படையின் தலைவர் ஜெனரல் ஹொசைன் சலாமி, ஹவுத்திகளின் தாக்குதல்களில் தனது நாடு ஈடுபடவில்லை என்று மறுத்தார்.
ஏமனின் பெரும்பகுதியைக் கட்டுப்பாட்டில் வைத்துள்ள ஹவுத்திகள், 2023 நவம்பர் முதல் கப்பல் போக்குவரத்தை குறிவைத்து 100க்கும் மேற்பட்ட தாக்குதல்களை நடத்தியது. அதற்கு பதில் நடவடிக்கையில் அமெரிக்க இராணுவமும் களம் இறங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.