முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் பாதுகாப்பை குறைப்பதற்கான அரசாங்கத்தின் முடிவை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமைகள் மனுவை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
மகிந்த ராஜபக்சவிற்கு வழங்கப்பட்ட பாதுகாப்புப் படையினரை 60 அதிகாரிகளாக குறைப்பதற்கான அரசாங்கத்தின் தீர்மானத்திற்கு எதிராக அடிப்படை உரிமை மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
இந்த மனு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, உயர் நீதிமன்றம் தனது முடிவை அறிவித்துள்ளது. நீண்ட நேரம் பரிசீலித்த பிறகு, நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்ததாக தெரிவிக்கப்படுகிறது.
முன்னாள் ஜனாதிபதிகள் மற்றும் அமைச்சர்களிக் பாதுகாப்பு தொடர்பில் ஆராய நியமிக்கப்பட்ட குழுவின் பரிந்துரைகளின் பிரகாரம் முன்னாள் ஜனாதிபதிகளுக்கான இராணுவப் பாதுகாப்பு நீக்கப்பட்டு பொலிஸ் பாதுகாப்பு மாத்திரமே தற்போது வழங்கப்படுகிறது.
அரசாங்கத்தின் இந்தத் தீர்மானத்தால் மகிந்த ராஜபக்ச உட்பட முன்னாள் ஜனாதிபதிகளின் உயிர்களுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக எதிர்க்கட்சிகளின் சில உறுப்பினர்கள் குற்றச்சாட்டுகளை முன்வைத்திருந்தனர். குறிப்பாக, எதிர்க்கட்சியின் உறுப்பினர்கள் மகிந்த ராஜபக்சவுக்கு ஐ.எஸ் அமைப்பு போன்ற பல அமைப்புகளிடமிருந்து உயிர் அச்சுறுத்தல்கள் உள்ளதாக குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர்.