யாழ்ப்பாண மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ராமநாதன் அர்ச்சுனா எம்பியிடம் 500 மில்லியன் ரூபாய் இழப்பீடு வழங்கக் கோரி வழக்கறிஞர்கள் மூலம் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அவதூறான கருத்துக்களை பேஸ்புக்கில் வெளியிட்டதாக கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில் இந்த நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக, கடந்த மார்ச் 10 ஆம் திகதி, 59 வயது ஜெர்மன் குடிமகன் ஒருவரின் சார்பாக வழக்கறிஞர் மூலம் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. அர்ச்சுனா ராமநாதன் மற்றும் எச்.பி. சமரகோன் ஆகியோர் 2025 பிப்ரவரி 12 ஆம் திகதி பேஸ்புக்கில் அவதூறான கருத்துக்கள் வெளியிட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளனர். இந்த கருத்துக்கள், ஜெர்மன் குடிமகனின் மனைவி மற்றும் மகளை கடுமையான மன உளைச்சலுக்கும், பொது அவமானத்திற்கும் ஆளாக்கியதாகவும், அந்த நபரின் நற்பெயருக்கு சேதம் விளைவித்ததாகவும் கூறப்படுகின்றது.
அர்ச்சுனா ராமநாதனுக்கு பல முறை எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருந்த போதிலும், அவர் அதை பின்பற்றவில்லை. மேலும், அவர் சமூக ஊடகங்களில் பொருத்தமற்ற கருத்துக்கள் மற்றும் வன்முறை தொடர்பாக பாராளுமன்ற சபாநாயகரிடமிருந்தும் எச்சரிக்கைகள் பெற்றுள்ளார்.
இந்த நோட்டீசில், அர்ச்சுனா ராமநாதன், தனது அவதூறான கருத்துக்களை திரும்பப் பெற்று, பொது மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும், பொய்யான அறிக்கைகள் வெளியிடுவதைத் தவிர்க்க உறுதி அளிக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. இதனை 14 நாட்களுக்குள் நிறைவேற்றாவிட்டால், அவதூறு வழக்குகள் தாக்கல் செய்யப்படும் என அந்த நோட்டீஸில் குறிப்பிடப்பட்டுள்ளது.