இந்த ஆண்டு தொடக்கத்தில், சீனாவில் போதைப்பொருள் குற்றங்களுக்காக நான்கு கனடியர்கள் தூக்கிலிடப்பட்டதாக கனடிய வெளியுறவு அமைச்சர் மெலானி ஜோலி உறுதிப்படுத்தியுள்ளார். இந்தக் கொலைகள் மீளமுடியாதவை மற்றும் அடிப்படை மனித கண்ணியத்திற்கு முரணானவை என்றும் அவர் கண்டனம் தெரிவித்தார். மேலும், இவ்வாறு மரணதண்டனைகளைத் தவிர்க்க கடந்த மாதங்களில் அவர் மற்றும் முன்னாள் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ சீனாவிடம் கருணை கோரியதாகவும் அவர் கூறினார்.
அத்துடன், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுடன் கனடிய அரசு அதிகாரிகள் தொடர்பில் இருப்பதாகவும் ஜோலி தெரிவித்தார். இந்நிலையில், கனடாவில் உள்ள சீனத் தூதரகம், சீனாவில் கனேடிய குடிமக்கள் தூக்கிலிடப்பட்டதை உறுதிப்படுத்தியுள்ளதோடு, எத்தனை பேர் என்பதைக் கூற மறுத்துள்ளது. தூதரகம், போதைப்பொருள் குற்றங்களுக்காக சீனாவில் மரணதண்டனைகள் விதிக்கப்படுவதை விளக்கி, சீனாவின் சட்டத்தை மீறுபவர்கள் அதன் படி பொறுப்பேற்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது.
இருந்தாலும், சீனத் தூதரகம், தூக்கிலிடப்பட்ட கனடியர்களுக்கு நியாயமான விசாரணை மற்றும் உரிய நடைமுறை வழங்கப்பட்டதாகவும், சீன நீதித்துறை அதிகாரிகள் சட்டபூர்வமாக வழக்குகளை கையாண்டுள்ளதாகவும் கூறியுள்ளது. மேலும், கனேடிய அரசாங்கத்தின் விமர்சனங்களுக்கு பதிலளிக்கும் விதமாக, சீனத்தின் நீதி அமைப்பை சட்டபூர்வமாக கருதுவதாகவும், கனடா தரப்பை பொறுப்பற்ற கருத்துக்களை வெளியிடுவதை நிறுத்துமாறு கேட்டுக் கொண்டுள்ளது.
சீன தூதரகம், சீனாவின் சட்டத்தின் ஆட்சி மற்றும் நீதித்துறை இறையாண்மையை மதிக்கவும், சீனா-கனடா உறவுகளின் முன்னேற்றத்தை ஊக்குவிக்கவும், உறுதியான நடவடிக்கைகள் எடுக்கவும் கனடாவிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.