வயிற்று வலியால் துடித்த வாலிபர் ஒருவர் தனக்கு தானே அறுவை சிகிச்சை செய்து கொண்ட சம்பவம் ஒன்று உத்தரபிரதேச மாநிலம் ஆக்ராவில் நடந்துள்ளது.
ஆக்ராவை அடுத்த மதுராவில் உள்ள கிராமத்தை சேர்ந்தவர் ராஜபாபு (வயது 32) இற்கு அடிக்கடி வயிற்று வலி ஏற்பட்டு வந்துள்ளது. இதற்காக அவருக்கு குடல் வால் அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.
இருந்தாலும் அவருக்கு வயிற்று வலி குணமாகவில்லை. ஆஸ்பத்திரிக்கு சென்றும் தீர்வு கிடைக்காததால் அவர் தனக்கு தானே அறுவை சிகிச்சை செய்து கொள்ள முடிவு செய்து, யூடியூப் மற்றும் ஆன்லைனில் வரும் வயிற்று வலி சம்பந்தமான குறிப்புகளை தேடியும், ஆபரேஷன் செய்யும் வீடியோக்களைப் பார்த்தும் அவர் தனக்கு தானே ஆபரேஷன் செய்ய திட்டமிட்டார்.
இவ்வாறு முடிவு எடுத்த அவ் வாலிபர் தனது வீட்டில் உள்ள ஒரு அறைக்கு சென்று கதவை பூட்டிக் கொண்டு ஆபரேஷன் செய்ய முயன்றார். தனக்கு தானே மயக்க ஊசியும் செலுத்திக் கொண்டதுடன், ஆபரேஷன் செய்யும் கத்தியால் தனது வயிற்றில் வலது புறம் 7 செ.மீ. அளவிற்கு கீறினார்.
அவர் எதிர்பார்த்ததை விட கத்தி ஆழமாக கீறியதால் வலி அதிகமாகி ரத்தம் வர தொடங்கியது. இதனை சரி செய்ய 10-12 தையல்களை அவரே போட்டுள்ளார். தவறான தையல்களால் ரத்தப்போக்கு நிற்காமல் அதிகமாகியதால் பயந்து போன அவர் கத்திக் கூச்சலிட்டுள்ளார்.
அவரது அலறல் சத்தம் கேட்டு வீட்டில் உள்ளவர்கள் அங்கு ஓடி வந்தனர். ரத்த வெள்ளத்தில் ராஜபாபு சரிந்து கிடப்பதையும் வயிற்றில் கீறல் இருப்பதையும் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். அவரை உடனடியாக மீட்டு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். ஆபத்தான நிலையில் உள்ள அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.