பிரித்தானியாவின் ஹீத்ரோ விமான நிலையத்தில் மின்சார விநியோகம் தடைப்பட்டதால், அதன் பணிகள் கட்டம் கட்டமாக வழமைக்குக் கொண்டு வரப்படுவதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
ஹீத்ரோ விமான நிலையத்திற்கு அருகிலுள்ள துணை மின் நிலையத்தில் தீப்பரவல் ஏற்பட்டதன் காரணமாக விமான நிலையத்திற்கான மின்சார விநியோகம் தடைபட்டுள்ளது. இதன் காரணமாக, ஹீத்ரோ விமான நிலையம் மறு அறிவித்தல் வரை மூடப்பட்டுள்ளதாக கடந்த 21ஆம் தேதி அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், கொழும்பு மற்றும் லண்டன் இடையே 21ஆம் தேதி இயக்கப்படவிருந்த இரண்டு விமான சேவைகளையும் ஸ்ரீலங்கன் விமான சேவைகள் இரத்து செய்தது.
சர்வதேச ஊடகங்களின் தகவலின்படி, சில விமானங்கள் தற்போது ஹீத்ரோ விமான நிலையத்தில் தரையிறக்கப்படுகின்றன.
இன்றைய தினத்திற்குள் விமான நிலையத்தின் பணிகளை முழுமையாக வழமைக்கு கொண்டுவர முடியும் என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.