விண்வெளி நிலையத்தில் 9 மாதங்களுக்கும் மேலாக சிக்கி தவித்த சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர், நீண்ட போராட்டத்திற்குப் பிறகு கடந்த 19ஆம் தேதி வெற்றிகரமாக பூமிக்கு திரும்பியுள்ளனர். வெறும் 8 நாள் பயணமாக சென்ற அவர்கள், விண்கலம் செயலிழந்ததால் 286 நாட்கள் அங்கேயே நீடித்தனர், இது திட்டமிட்டதை விட கூடுதலாக 278 நாட்கள் ஆகும்.
இந்த நிலையில், அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் நேற்று வெள்ளை மாளிகையில் பத்திரிகையாளர்களை சந்திக்கும்போது, அவர்கள் விண்வெளியில் கூடுதல் நாட்கள் இருந்ததற்கான சம்பளத்தைக் குறித்து கருத்து தெரிவித்தார். “இதை யாரும் என்னிடம் குறிப்பிடவில்லை. தேவைப்பட்டால், நான் என் சொந்த பணத்தில் இருந்து கொடுப்பேன்” என அவர் கூறினார். மேலும், சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோரை பத்திரமாக பூமிக்கு அழைத்து வந்ததற்காக ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனர் எலான் மஸ்குக்கு நன்றி தெரிவித்தார்.
இதேநேரம், விண்வெளியில் கூடுதல் காலம் இருந்ததற்காக, சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோருக்கு நாள் ஒன்றுக்கு 5 டொலர்கள் சிறப்பு சம்பளமாக வழங்கப்படும் என கூறப்படுகிறது. இதனால், அவர்களின் ஆண்டு வருமானமான 1,52,258 டொலர்களுடன் கூடுதலாக 1,430 டொலர்கள் வழங்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.