நைஜரில் உள்ள பம்பிடா கிராமத்தில் உள்ள மசூதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 44 பேர் உயிரிழந்துள்ளனர். புர்கினா பாசோ மற்றும் மாலி எல்லைக்கு அருகிலுள்ள இந்த கிராமத்தில், முஸ்லிம்கள் தொழுகை நடத்திக் கொண்டிருக்கும்போது ஆயுதமேந்திய பயங்கரவாதிகள் மசூதியை சுற்றிவளைத்து தாக்குதல் நடத்தினர். இதில் 44 பேர் உயிரிழந்ததுடன், 13 பேர் படுகாயமடைந்தனர் என்று நாட்டின் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
தாக்குதலுக்கு உடனடியாக யாரும் பொறுப்பேற்கவில்லை, ஆனால் இது ஐ.எஸ். அமைப்பு மேற்கொண்டதாக உள்துறை அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது. பயங்கரவாதிகள் மசூதியுடன் அருகிலுள்ள சந்தை மற்றும் வீடுகளுக்கும் தீவைத்தனர்.
இந்த துயரமான சம்பவத்தின் பின்னர் நைஜர் அரசு மூன்று நாட்கள் தேசிய துக்க தினம் அனுசரிக்கப்படும் என்று அறிவித்துள்ளது. கடந்த பத்து ஆண்டுகளாக, நைஜர், மாலி மற்றும் புர்கினா பாசோ ஆகிய நாடுகள் அல்கொய்தா உள்ளிட்ட ஜிகாதி கிளர்ச்சி குழுக்களால் நடைபெறும் வன்முறைகளை கட்டுப்படுத்த போராடி வருகின்றன.