முன்னைய அரசாங்கங்களின் காலத்தில் சட்டவிரோதமாக அல்லது முறையற்ற முறையில் கையகப்படுத்தப்பட்ட அரச சொத்துக்களை பறிமுதல் செய்யும் புதிய சட்டங்களை உள்ளடக்கிய மசோதா நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என்று தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் சந்தன சூரியராச்சி தெரிவித்துள்ளார்.
இந்த மசோதா எதிர்வரும் ஏப்ரல் 8ஆம் தேதி நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என்றும், இதன் மூலம் அரச சொத்துக்களை துஷ்பிரயோகம் செய்யும் தனிநபர்களின் எந்தவொரு சொத்தும் நீதிமன்ற நடவடிக்கைகளின் மூலம் சட்டபூர்வமாக மீட்டெடுக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டின் முன்னணி ஆட்சியாளர்கள், அவர்களது நெருங்கிய கூட்டாளிகள், உறவினர்கள், மற்றும் அரசியல் துறையினர்கள் அரசு சொத்துக்கள், வளங்கள், மற்றும் நிதிகளை பல்வேறு முறையில் தவறாக பயன்படுத்தி தனிப்பட்ட சொத்துக்களாக மாற்றியுள்ளனர்.
இந்த மசோதா மூலம், சட்டவிரோதமான அல்லது முறையற்ற வழிகளில் சேர்த்த சொத்துக்களை மீண்டும் அரசுக்காக மீட்டெடுக்க வழிவகை செய்யப்படும். மேலும், நாட்டு மக்களின் அபிலாஷைகளை நாங்கள் நாளுக்கு நாள் நிறைவேற்றி வருகிறோம் என்று தாம் நம்புவதாகவும் சந்தன சூரியராச்சி தெரிவித்துள்ளார்.