உக்ரைன் தலைநகர் கீவில், ரஷியா மேற்கொண்ட ட்ரோன் தாக்குதலில் 5 வயது குழந்தை உள்பட மூவர் உயிரிழந்துள்ளனர். மேலும், 10 பேர் காயமடைந்ததாக கீவ் நகர ராணுவ நிர்வாகம் தெரிவித்துள்ளது. இந்த தாக்குதல் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைக்கு இடைப்பட்ட இரவில் நடந்ததாக கூறப்படுகிறது.
நேட்டோ ராணுவக் கூட்டமைப்பில் இணைவதற்கு உக்ரைன் முடிவு செய்ததை ரஷியா தனது பாதுகாப்புக்கு ஆபத்தாகக் கருதி, 2022 ஆம் ஆண்டில் போர் தொடங்கியது. இந்தப் போர் தற்போது மூன்று ஆண்டுகளை கடந்துள்ளது. போரை முடிவுக்குக் கொண்டுவர அமெரிக்கா நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது.
இந்த நிலையிலும், போர் தொடர்ந்துக்கொண்டிருக்க, இதை முடிவுக்குக் கொண்டுவரும் முயற்சியாக ரஷியா-உக்ரைன் இடையே திங்கள்கிழமை சவூதி அரேபியாவில் பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது. அமெரிக்கா மறைமுகமாக மத்தியஸ்தம் செய்யும் இந்த பேச்சுவார்த்தையில், எரிசக்தி நிலையங்கள் மற்றும் உள்கட்டமைப்புகளை குறிவைத்து மேற்கொள்ளப்படும் தொலைதூர தாக்குதல்களை நிறுத்துவது பற்றியும் பேசப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.