கனடாவின் புதிய பிரதமராக பொறுப்பேற்றுள்ள மார்க் கார்னி, நாடாளுமன்றத்தை முன்கூட்டியே கலைத்து பொதுத் தேர்தல் நடத்தப்போவதாக அறிவித்துள்ளார். தற்போதைய அரசின் பதவிக்காலம் அக்டோபர் மாதம் வரை இருக்கும் நிலையில், வரும் ஏப்ரல் 28ஆம் திகதி தேர்தல் நடத்தப்போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 10 ஆண்டுகளாக பிரதமராக இருந்த ஜஸ்டின் ட்ரூடோ மீது மக்கள் மற்றும் அவரது லிபரல் கட்சிக்குள் அதிருப்தி அதிகரித்த நிலையில், அவர் கடந்த மாதம் தனது பதவியை ராஜிநாமா செய்தார். அதன் பின்னர் பொருளாதார நிபுணரான மார்க் கார்னி புதிய பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டு, மார்ச் 14ஆம் திகதி அதிகாரப்பூர்வமாக பதவியேற்றார்.
பதவியேற்ற 10 நாட்களுக்குள், நாடாளுமன்றத்தை கலைத்து தேர்தல் நடத்த அறிவித்துள்ள கார்னி, “டிரம்ப் நம்மை சிதைக்க நினைக்கிறார், ஆனால் நாம் அதை அனுமதிக்கமாட்டோம். மக்கள் வல்லமை மிக்க தலைவரை தேர்ந்தெடுக்க வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார்.
343 நாடாளுமன்ற தொகுதிகளுக்கான இந்த தேர்தலில் பெரும்பான்மை பெற 172 இடங்களில் வெற்றி பெற வேண்டும். தற்போது கனடாவில் ஆளும் லிபரல் கட்சி மற்றும் எதிர்க்கட்சியான கன்சர்வேடிவ் கட்சி இடையே கடுமையான போட்டி நிலவுகிறது.