வங்கதேச கிரிக்கெட் அணியின் பிரபல துடுப்பாட்டக்காரரான தமீம் இக்பால் மைதானத்தில் பீல்டிங் செய்யும் போது திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது.
70 டெஸ்ட், 243 ஒருநாள் மற்றும் 78 டி20 போட்டிகளில் விளையாடி 15,249 ரன்களை குவித்துள்ள தமீம், 25 சதங்களை அடித்துள்ளார். 2020 முதல் 2023 வரை வங்கதேச ஒருநாள் அணியின் அணித்தலைவராக செயல்பட்ட அவர், 2023ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார்.
சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றிருந்தாலும், உள்ளூர் போட்டிகளில் தொடர்ந்து விளையாடி வந்த தமீம், தற்போது Dhaka Premier League தொடரில் விளையாடி வருகிறார். இன்று முகமதியன் ஸ்போர்டிங் கிளப் மற்றும் ஷைன்புகூர் கிரிக்கெட் கிளப் இடையேயான போட்டியின் போது, பீல்டிங் செய்யும் நேரத்தில் திடீரென அவர் நெஞ்சு வலியை உணர்ந்தார்.
உடனடியாக, அவரை டாக்காவில் உள்ள மருத்துவமனைக்கு ஹெலிகாப்டர் மூலம் கொண்டு செல்ல முயற்சித்தனர். ஆனால் தமீம் இக்பால் அதற்கு ஒத்துழைக்காததால், அவரை சவார் நகரில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை மேற்கொண்ட மருத்துவர்கள் அவருக்கு இதய நோய் இருப்பதை உறுதிப்படுத்தினர்.
தற்போது அவர் அவசர சிகிச்சைப் பிரிவில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றார். மைதானத்தில் விளையாடும் போது ஏற்பட்ட இந்த நெஞ்சு வலி சம்பவம் சர்வதேச கிரிக்கெட் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.