95 வயது மூதாட்டி விளையாட்டு மைதானம் அமைப்பதற்காக 5 ஏக்கர் நிலத்தை தானமாக வழங்கியுள்ளார். ஒடிசாவின் நுவாபாட் மாவட்டத்தில் உள்ள சிங்கஜார் கிராமத்தைச் சேர்ந்த நிலாம்பர் மற்றும் சாவித்ரி மஜ்ஹி தம்பதியரில், சாவித்ரியின் கணவர் 10 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். தற்போது 95 வயதாகிய சாவித்ரி, சமூகத்திற்கு உதவும் செயல்களில் ஆர்வம் காட்டி வருகின்றார்.
கல்விக்கும் விளையாட்டிற்கும் முக்கியத்துவம் கொடுக்கும் இவர், கிராமத்திலுள்ள சிறுவர்கள் விளையாடுவதை பார்த்து மகிழ்வார். இதே நேரத்தில், கிராமத்தில் தனியார் மைதானத்தில் மட்டுமே கிரிக்கெட் போட்டிகள் நடத்த முடியுமென்பது அவருக்கு நினைவுக்கு வந்தது. கிராமத்திற்கு ஒரு பொதுவான விளையாட்டு மைதானம் தேவையென உணர்ந்த அவர், தனது சொந்த 5 ஏக்கர் நிலத்தை மைதானத்திற்காக தானமாக வழங்கினார்.
மேலும், அரசாங்கம் இந்த நிலத்தில் ஒரு விளையாட்டு மைதானம் அமைக்க வேண்டும் என்பதும் அவரது கோரிக்கையாக உள்ளது. இது மட்டுமின்றி, கடந்த காலங்களில் தொடக்கப்பள்ளி, உயர்நிலைப் பள்ளி, கல்லூரி, கோவில் ஆகியவற்றிற்காகவும் தனது சொந்த நிலங்களை சாவித்ரி வழங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.