டெஸ்லா விற்பனை ஐரோப்பாவில் கடுமையாக சரிவு கண்டுள்ளது. 2025 ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில், ஐரோப்பிய ஒன்றிய சந்தையில் டெஸ்லா வாகன பதிவு 49% குறைந்து, 19,046 புதிய வாகனங்கள் மட்டுமே விற்கப்பட்டதாக ஏசி.இ.ஏ (ACEA) வெளியிட்ட தகவலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மொத்த மின்சார கார் விற்பனை 28.4% அதிகரித்துள்ள நிலையில், டெஸ்லாவுக்கு மட்டும் இது எதிர்மறையாக அமைந்துள்ளது. சீன மற்றும் ஐரோப்பிய நிறுவனங்கள் புதிய மொடல்களுடன் போட்டியை அதிகரித்துள்ளன. மேலும், எலோன் மஸ்கின் அரசியல் கருத்துகள், குறிப்பாக ஜேர்மனியின் வலதுசாரி கட்சிக்கு அவர் ஆதரவளித்தது, நுகர்வோரிடையே எதிர்ப்பை உருவாக்கியுள்ளது. இதனால், ஜேர்மனியில் மட்டும் டெஸ்லா விற்பனை 76% குறைந்துள்ளது.
மேலும், சில டெஸ்லா வாகனங்கள் தீ வைத்து அழிக்கப்பட்டது, மற்றும் அமெரிக்காவில் டெஸ்லா ஷோரூம்கள் தாக்குதல் சந்தித்தது ஆகியவை டெஸ்லாவின் நற்பெயருக்கு கடுமையான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
பழைய மொடல்களில் எந்த புதிய மாற்றங்களும் இல்லாதது, மின்சார கார்களின் நம்பகத்தன்மை குறித்த கேள்விகள், மற்றும் Cybertruck Recall பிரச்சனை போன்றவை விற்பனை குறைவினை ஏற்படுத்தியுள்ளன. மேலும் இதன் விளைவாக, டெஸ்லாவின் சந்தைப் பங்கு 1.1% ஆக சரிந்துள்ளது.