கனேடியர்கள் அமெரிக்கா செல்லும் முக்கிய சுற்றுலாப்பயணிகளாக இருந்தபோதிலும், தற்போது பலர் அமெரிக்கா செல்ல விரும்பவில்லை. ட்ரம்ப் கனடா மீது வரிகள் விதிக்கப் போவதாக கூறியதன் பின்னர், கனேடியர்களை அமெரிக்காவை தவிர்த்து சொந்த நாட்டில் உள்ள சுற்றுலாத்தலங்களை பார்வையிடுமாறு முன்னாள் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கேட்டுக்கொண்டார். இதனை மக்கள் பின்பற்றத் தொடங்கியுள்ளனர்.
பிப்ரவரி மாதத்தில் அமெரிக்கா சென்றுவிட்டு திரும்பிய கனேடியர்களின் எண்ணிக்கை முந்தைய ஆண்டைவிட 23% குறைந்துள்ளது. ட்ரம்பின் வரிவிதிப்பு அச்சுறுத்தல்களைவிட, கனடாவை அமெரிக்காவுடன் இணைப்பதைப் பற்றி அவர் மிரட்டுவதே கனேடியர்களுக்கு அதிக கோபத்தையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
மேலும், சமீப காலமாக அமெரிக்கா செல்லும் சுற்றுலாப் பயணிகளில் கிரீன் கார்டு வைத்திருப்பவர்களுக்குக் கூட சட்டமுறை பிரச்சினைகள் ஏற்பட்டு, அவர்கள் கைது செய்யப்படுவதாக செய்திகள் வெளிவந்துள்ளன. இதனால் கனேடியர்கள் அமெரிக்காவுக்கு செல்லும் எண்ணத்திலிருந்து விலகி வருகின்றனர்.
2024 ஆம் ஆண்டு மட்டும் 20.2 மில்லியன் முறை கனேடியர்கள் அமெரிக்கா சென்றுள்ளனர். அவர்களில் 10% பேர் அமெரிக்கா செல்வதை தவிர்த்தாலே அமெரிக்கா சுமார் 2 பில்லியன் டொலர் இழக்க நேரிடும். இதன் விளைவாக 14,000 பேர் வேலை இழக்கும் சூழ்நிலை உருவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.