பிரித்தானியா இலங்கையின் போர்வீரர்களுக்கு விதித்துள்ள தடையின் காரணம் மனித உரிமைகள் மீறல்கள் அல்ல, மாறாக விடுதலைப் புலிகளை ஆதரிப்பவர்களின் அழுத்தத்தின் விளைவாகும் என்று இலங்கை பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
தமது எக்ஸ் தளத்தில் (X) வெளியிட்டுள்ள பதிவில், “இது நீதி அல்ல, சில மேற்கத்திய அரசியல்வாதிகள் பணத்தின் மூலம் செல்வாக்கு செலுத்தி சலுகைகளை அனுபவிக்கின்றனர்” என குறிப்பிட்டுள்ளார். இதனால் தேசிய நல்லிணக்கத்திற்கு ஆபத்து ஏற்படும் என்றும் வடக்கு, தெற்கு மக்கள் இதை புரிந்து கொள்ள வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
இலங்கையின் சுதந்திரம் கடுமையான முடிவுகளின் மூலம் பெற்றது, எனவே சமூகங்களுக்கு இடையிலான நல்லிணக்கத்தை சீர்குலைக்க யாருக்கும் அனுமதி வழங்கக்கூடாது என்று அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், சில சர்வதேச அரசு சாரா நிறுவனங்கள், தமிழ் அரசியல்வாதிகள் சமூகங்களில் பிளவுகளை உருவாக்கும் முயற்சியில் இருப்பதாகவும், தமிழ் சமூகம் அவர்களின் திட்டங்களுக்கு இரையாகாமல் இருக்க வேண்டும் என்றும் நாமல் ராஜபக்ச வலியுறுத்தியுள்ளார்.