கடந்த 12 மாதங்களில் பிள்ளைகளிடையே மனநலப் பிரச்சினைகள் அதிகரித்துள்ளதாக ஆலோசகர் மற்றும் மருத்துவர் சிராந்திகா விதானகே எச்சரிக்கை விடுத்துள்ளார். குறிப்பாக தற்கொலை எண்ணங்கள், திட்டமிடல் மற்றும் முயற்சிகள் சமூகத்தில் முக்கிய பிரச்சினைகளாக உருவெடுத்து வருகின்றன.
நாட்டில் 16-17 வயதுக்குட்பட்டவர்களில் 18% பேர் மனச்சோர்வை அனுபவிக்கின்றனர். அதேவேளை 22.4% பேர் தனிமையை உணர்கிறார்கள், 11.9% பிள்ளைகள் கவலையால் உறங்க முடியவில்லை, மேலும் 7.5% பேருக்கு 2016 முதல் நெருக்கமான நண்பர்கள் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.
பெண்கள் இடையே 15.4% பிள்ளைகள் தற்கொலை எண்ணங்களைக் கொண்டுள்ளதுடன், 9.6% பேர் தற்கொலைத் திட்டங்களை தீட்டுகின்றனர், மேலும் 9.1% பேர் தற்கொலைக்கு முயற்சித்துள்ளனர். புகையிலை பயன்பாடு கடந்த 30 நாட்களில் 5.7% அதிகரித்துள்ளதோடு, புகையற்ற புகையிலைப் பயன்பாடு 7.3% அதிகரித்துள்ளது.
இ-சிகரெட் பயன்பாடும் அதிகரித்து வருவதால் இது ஒரு கவலைக்குறியாகியுள்ளது. 5% பேர் இதைப் பயன்படுத்துவதாக புகாரளித்துள்ளனர். 2016 முதல் பிள்ளைகள் அதிக அளவில் டிஜிட்டல் சூழல்களில் மூழ்கி இருப்பதாலும் இப்பிரச்சினைகள் தொடர்ந்து நிலைகொண்டுள்ளன.
21.9% ஆண்கள் இன்னும் கொடுமைப்படுத்தப்படுவதாகக் கூறினாலும் ஒட்டுமொத்தமாக கொடுமைப்படுத்தல் குறைந்துள்ளது. ஆனால் கடந்த 12 மாதங்களில பாலின அடிப்படையில் பெண்களை விட 5.4% அதிகமான ஆண்கள் சைபர் புல்லிங்கை அனுபவித்துள்ளனர்.