ஐரோப்பாவின் பல்வேறு நாடுகள், அமெரிக்காவில் திருநங்கை குடிமக்கள் காலவரையின்றி தடுத்து வைக்கப்படும் அபாயம் உள்ளதாக எச்சரிக்கை விடுத்துள்ளன. அமெரிக்க ஜனாதிபதியாக பொறுப்பேற்ற டொனால்டு ட்ரம்ப், இனி ஆண் மற்றும் பெண் என்ற இரண்டு பாலினங்களை மட்டுமே அங்கீகரிப்பதாக அறிவித்தார்.
இதில் பாகுபாட்டைத் தடுக்கும் உத்தரவை ரத்து செய்தல் மற்றும் ராணுவத்தில் திருநங்கைகள் பணியாற்றுவதற்கான தடை ஆகியவை அடங்கும். இந்த முடிவு திருநங்கைகள் மற்றும் non-binary பயணிகளுக்கு அமெரிக்கா செல்ல தடையாக மாறலாம் என்ற அச்சம் எழுந்துள்ளது.
மேலும், அவர்களின் விசாக்கள், கடவுச்சீட்டுகள் மற்றும் பிற ஆவணங்களில் ‘sex at birth’ (பிறக்கும் போது அவர்களின் பாலினம்) மட்டுமே குறிப்பிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், ஆவணங்களில் ‘X’ என்று உள்ளவர்கள் அமெரிக்காவில் நுழைவது கடினமாகலாம்.
சமீபத்தில் பலர் அமெரிக்க எல்லையில் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளதால், பயணிகள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என ஐரோப்பிய நாடுகள் அறிவுறுத்துகின்றன. இந்த சூழலில், பிரான்ஸ், அயர்லாந்து, ஜேர்மனி உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகள் தங்களின் திருநங்கை குடிமக்களுக்கு அமெரிக்க பயணங்களை தவிர்க்க அறிவுறுத்தியுள்ளன.
குறிப்பாக, அயர்லாந்தின் வெளிவிவகாரத்துறை பயணிகள் பிறந்தபோது அவர்களின் பாலினத்தை உறுதி செய்ய வேண்டும் என்று அறிவித்துள்ளது. இதுவரை ஆஸ்திரியா, டென்மார்க், பிரான்ஸ், ஜேர்மனி, அயர்லாந்து, நோர்வே, ஸ்லோவாக்கியா, ஸ்லோவேனியா மற்றும் நெதர்லாந்து ஆகிய நாடுகள் இந்த எச்சரிக்கையை வெளியிட்டுள்ளன. ஆனால், பிரித்தானியா மற்றும் கனடா இதுவரை திருநங்கை குடிமக்கள் தொடர்பாக சிறப்பு எச்சரிக்கை விடுக்கவில்லை, பொதுவான எச்சரிக்கையே வழங்கியுள்ளது.