இலங்கையில் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் முச்சக்கர வண்டிகளை செலுத்துவது அதிகரித்து வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அண்மையில் வெளிநாட்டினர் செலுத்திய முச்சக்கர வண்டிகளால் உயிரிழப்பு மற்றும் கடுமையான விபத்துகள் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் கவலை வெளியிட்டுள்ளனர். இவர்களிடம் செல்லுபடியாகும் சாரதி அனுமதிப் பத்திரம் இல்லாததோடு வண்டி செலுத்துவதற்கான சரியான பயிற்சியும் இல்லை என்பதையும் அவர்கள் கண்டறிந்துள்ளனர்.
இதனால் இந்த நிலைமையை கட்டுப்படுத்தும் முயற்சியாக செல்லுபடியாகும் உரிய அனுமதிப் பத்திரமின்றி வெளிநாட்டினர் முச்சக்கர வண்டிகளை செலுத்தினால், வாகன உரிமையாளரை அழைத்து வாக்குமூலம் பதிவு செய்து அவருக்கு எதிராக நீதிமன்றத்தில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று பொலிஸார் அறிவித்துள்ளனர்.
மேலும் சுற்றுலாப் பயணிகளுக்கு வாகனங்களை வழங்கும் முன்பு குறிப்பாக முச்சக்கர வண்டிகளை வழங்கும் போது அவர்களிடம் செல்லுபடியாகும் சாரதி அனுமதிப் பத்திரம் உள்ளதா என்பதை சரிபார்க்க வேண்டும் என்று பொலிஸார் வாகன வழங்குநர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.