இலங்கை மத்திய வங்கியின் நாணயக் கொள்கை சபை பணவீக்கத்தைக் குறைத்து 5% இலக்கை நோக்கி நகர்த்துவதுடன் தற்போதைய நாணய நிலைப்பாட்டை பரிசீலனை செய்து அதன் ஓரிரவுக் கொள்கை விகிதத்தை 8.00% இல் பேணுவதற்கு முடிவு செய்துள்ளது.
நேற்று (25) நடைபெற்ற நாணய சபைக் கூட்டத்தில் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டது. உள்நாட்டு மற்றும் உலகளாவிய பொருளாதார முன்னேற்றங்களை கருத்தில் கொண்டு இந்த முடிவு மேற்கொள்ளப்பட்டதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது. தற்போது நடைமுறையில் இருக்கும் நாணயக் கொள்கை பணவீக்கம் 5% இலக்கை நோக்கி நகர்வதற்கு துணைபுரியும் என்பதோடு உள்நாட்டு பொருளாதார வளர்ச்சிக்கும் ஆதரவாக இருக்கும் என்று சபை தெரிவித்துள்ளது.
மின்சாரக் கட்டணங்கள் மற்றும் எரிபொருள் விலைகள் தொடர்ந்து குறைக்கப்பட்டதன் விளைவாக தற்போதைய பணவீக்கம் எதிர்மறையாக உள்ளது. எனினும் 2025 ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் பணவீக்கம் மீண்டும் நேர்மறையாக மாறும் என எதிர்பார்க்கப்படுவதாக மத்திய வங்கி குறிப்பிட்டுள்ளது.
மேலும், ஆண்டு இறுதிக்குள் பணவீக்கம் இலக்கு நிலையை அடையும் என்று தற்போதைய தரவுகள் முன்னறிவிக்கின்றன. 2024 ஆம் ஆண்டு இரண்டு வருடத் தொடர்ச்சியான பொருளாதார சுருக்கத்திற்கு பிறகு இலங்கை பொருளாதாரம் வலுவான மீட்சியை பதிவு படுத்தியுள்ளதாக சமீபத்திய மதிப்பீடுகள் வெளிப்படுத்தியுள்ளன.