நியூசிலாந்து அணி பாகிஸ்தானுக்கு எதிரான கடைசி டி20 போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. வெல்லிங்டனில் நடைபெற்ற இந்த போட்டியில் பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதின.
முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி தொடக்கத்தில் விக்கெட்களை இழந்தது. அதனால் அணியின் ரன் கணக்குத் தடைபட்டது. ஆனால் அணித் தலைவர் சல்மான் அஹா பொறுப்புடன் விளையாடி 39 பந்துகளில் 51 ஓட்டங்கள் விளாசினார். அவர் நீஷம் ஓவரில் ஆட்டமிழந்த பின்னர் மற்ற வீரர்கள் தொடர்ந்து விக்கெட்டுகளை இழந்தனர்.
இதனால் பாகிஸ்தான் அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 128 ஓட்டங்கள் மட்டுமே எடுத்தது. ஷதாப் கான் 20 பந்துகளில் 5 பவுண்டரிகளுடன் 28 ஓட்டங்கள் சேர்த்தார். பந்துவீச்சில் ஜேம்ஸ் நீஷம் அசத்தி தனது முதல் ஐந்து விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
பின்னர் இலக்கை நோக்கி விளையாடிய நியூசிலாந்து அணி தொடக்கத்திலேயே அதிரடியாக ஆடியது. குறிப்பாக டிம் செய்பெர்ட் தனது அபார ஆட்டத்தால் 38 பந்துகளில் 10 சிக்ஸர், 6 பவுண்டரிகளுடன் 97 ஓட்டங்கள் குவித்து அசத்தினார். இதனால் நியூசிலாந்து அணி 10 ஓவரிலேயே 131 ஓட்டங்களை எடுத்து மிகச்சிறந்த வெற்றியை பதிவு செய்தது.