அமெரிக்கா இறக்குமதி செய்யும் கார்கள் மற்றும் அவற்றின் உதிரிப்பாகங்களுக்கு 25% புதிய வரியை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார். இந்த வரி எதிர்வரும் ஏப்ரல் 2ம் திகதி முதல் அமுலாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கை அமெரிக்க கார் தொழில்துறையின் வளர்ச்சிக்கு துணைபுரியும் மற்றும் புதிய முதலீடுகளை ஊக்குவித்து வேலை வாய்ப்புகளை அதிகரிக்கும் எனவும் அவர் தெரிவித்தார்.
கடந்த ஆண்டு மட்டும் அமெரிக்கா 80 இலட்சம் கார்களை இறக்குமதி செய்துள்ளதுடன் இதன் மதிப்பு 240 பில்லியன் அமெரிக்க டொலராகும். அமெரிக்காவுக்கு அதிகளவில் கார்களை ஏற்றுமதி செய்யும் நாடுகளில் மெக்சிகோ முதலிடத்தில் உள்ளது. அதன் பின்னர் தென்கொரியா, ஜப்பான், கனடா மற்றும் ஜெர்மனி ஆகிய நாடுகளும் குறிப்பிடத்தக்க அளவில் ஏற்றுமதி செய்கின்றன.
இந்த புதிய வரி விதிப்பு உலகளாவிய வர்த்தகத்தில் மாற்றங்களை ஏற்படுத்தக்கூடும். பொருளியல் ஆய்வாளர்கள் இது உலகளாவிய வர்த்தகப் போருக்கு வழிவகுக்கும் என்று தெரிவிக்கின்றனர்.