தாய்லாந்தின் பாங்கொக்கில் ஏற்பட்ட சக்திவாய்ந்த பூகம்பத்தினால் கட்டிடங்கள் இடிந்து விழுந்துள்ளன. இந்த இடிபாடுகளுக்குள் சிக்கியிருப்பவர்கள் அலறி உதவி கோருவதாக பொலிஸ் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.
பாங்கொக்கின் பாங் சூமாவட்ட பொலிஸ் அதிகாரி தாய்லாந்தின் தலைநகரம் இதற்கு முன்பு இதுபோன்ற பூகம்பத்தை எதிர்கொண்டதில்லை என கூறியுள்ளார். பொதுமக்கள் தங்களை காப்பாற்றுமாறு மன்றாடுவதை கேட்டதாகவும் நூற்றுக்கணக்கானவர்கள் காயமடைந்திருக்கலாம் என மதிப்பீடு செய்யப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
தற்போது உயிரிழந்தவர்களின் மற்றும் காயமடைந்தவர்களின் எண்ணிக்கையை உறுதிப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன. எனினும் பல உயிர்களை இழந்திருக்கலாம் என்ற அச்சம் நிலவுகிறது. இதுபோன்ற சக்திவாய்ந்த பூகம்ப அனுபவத்தை பாங்கொக்கில் ஒருபோதும் உணர்ந்ததில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளை மியன்மாரின் நய்பிடாவ் மருத்துவமனையில் நூற்றுக்கணக்கான காயமடைந்தவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவசரசேவை பிரிவும் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மருத்துவமனைக்கு வரும் பலரின் உடல்கள் இரத்தத்தாலும் புழுதியாலும் மூடப்பட்டுள்ளன என ஏஏவ்பி செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.