அமெரிக்காவில் ஆண்டு அச்சுறுத்தல்கள் என்ற பெயரில் வெளியான அறிக்கையில், பெண்டானில் தயாரிப்பதற்குத் தேவையான ரசாயனங்கள் இந்தியா மற்றும் சீனாவில் அதிகளவில் தயாரிக்கப்பட்டு, சட்டவிரோதமாக போதைப்பொருள் கடத்தல் கும்பல்களுக்கு விநியோகிக்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் போதைப்பொருள் பயன்பாடு சமீப காலங்களில் மிக அதிகரித்துள்ள நிலையில் அதனை கட்டுப்படுத்தும் முயற்சியில் அரசாங்கம் தீவிரம் காட்டி வருகிறது. இந்த சூழலில் போதைப்பொருள் தயாரிப்புக்கான பெண்டானில் ரசாயனக் கலவை கடத்தலில் சீனா மற்றும் இந்தியா முக்கியப் பங்காற்றுவதாக அமெரிக்க உளவு அமைப்பு தெரிவித்துள்ளது.
பெண்டானில் அமெரிக்காவில் வலி நிவாரணியாக சட்டப்பூர்வமாக வழங்க அனுமதி பெற்றிருந்தாலும் இதன் அதிகப்படியான பயன்படுத்துதல் காரணமாக கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் வரையிலான காலக்கட்டத்தில் 52,000 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதனை தடுக்க சீனாவில் தயாரிக்கப்படும் பெண்டானில் ரசாயனங்களுக்கு அதிக வரி விதிக்கப்படும் என அதிபர் டிரம்ப் அறிவித்திருந்தார். மேலும் போதைப்பொருள் கடத்தலை தடுக்கத் தவறியதாக கனடா மற்றும் மெக்சிகோ மீதும் கூடுதல் வரி விதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.