எலான் மஸ்கின் டெஸ்லா நிறுவனத்திற்கு கனடா அரசாங்கம் வழங்கிய அனைத்து சலுகைகளையும் நிறுத்தி உள்ளது. இதில் டெஸ்லா நிறுவனத்திற்கு முன்பாக வழங்கப்பட்ட 43 மில்லியன் டாலர் தள்ளுபடி தொகை உடன் நிறுத்தப்பட்டுள்ளதுடன், மின்சார வாகனங்களுக்கான தள்ளுபடி திட்டங்களிலிருந்தும் டெஸ்லாவை ஒதுக்கி வைத்துள்ளது.
இந்த முடிவை கனடா போக்குவரத்து துறை அமைச்சர் கிறிஸ்டியா ஃப்ரீலேண்ட் அறிவித்துள்ளார். மேலும் ஒவ்வொரு கோரிக்கையும் தனிப்பட்ட முறையில் ஆராயப்படும் வரை டெஸ்லாவிற்கு எந்தவொரு நிதியுதவியும் வழங்கப்படமாட்டாது என்று அவரது அலுவலகம் தெரிவித்துள்ளது.
கனடாவில் ஏப்ரல் 28ஆம் திகதி நடைபெற உள்ள பொதுத் தேர்தலை முன்னிட்டு இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருக்கலாம் எனக் கூறப்படுகிறது. இதேவேளை அமெரிக்காவுடனான வர்த்தக பிரச்சனைகளின் காரணமாக வாடகை டாக்ஸிகள் அல்லது சவாரி பகிர்வு நிறுவனங்கள் டெஸ்லா கார்களை வாங்குவதற்கு ஒன்டாரியோ மாகாணம் வழங்கிய நிதிச் சலுகையும் நிறுத்தப்பட்டிருக்கிறது.
அமெரிக்காவுடனான கனடாவின் உறவு தற்போதைய அரசியலில் முக்கிய பிரச்சனையாக உருவாகியுள்ள நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கிடையில் டெஸ்லா நிறுவனம் இதுவரை எந்தவொரு மறுமொழியும் வழங்கவில்லை.
மேலும் கனடாவில் தயாரிக்கப்பட்ட பொருட்கள் அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யும் போது 25% வரி விதிக்கப்படும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார். இதேசமயம் டெஸ்லா தலைவர் எலான் மஸ்க் அரசாங்க செயல்திறன் துறையின் தலைவராக செயல்பட்டு அமெரிக்க கூட்டாட்சி அரசாங்கம் மற்றும் அதன் பட்ஜெட்டை குறைக்கும் முயற்சியில் வெள்ளை மாளிகையின் தலைமைப் பதவியை வகித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.