அமெரிக்கா ஈரான் மீது இராணுவ நடவடிக்கை எடுத்து முன்னேறினால், அந்த பகுதியில் உள்ள அமெரிக்க தளங்களை தாக்கும் என ஈரான் நாடாளுமன்ற சபாநாயகர் முகமது கலிபாஃப் எச்சரித்துள்ளார். அமெரிக்கா புதிய அணுசக்தி ஒப்பந்தத்தில் ஈரான் ஒத்துழைக்க மறுத்தால் இராணுவ நடவடிக்கைகளை எதிர்கொள்ள நேரிடும் என எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதற்கிடையில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனிக்கு ஒரு கடிதம் அனுப்பியதாக தகவல் வெளியாகியுள்ளது. அதில் ஈரானை கையாள இரண்டு வழிகள் உள்ளன, ஒன்று இராணுவ நடவடிக்கை, அல்லது இரண்டாவது ஒப்பந்தம் செய்து கொள்ளுதல் என அவர் உறுதியாக கூறியுள்ளார்.
இந்த சூழ்நிலையில் அமெரிக்கா ஈரானின் புனிதங்களை அழிக்க முயன்றால் அது முழு பிராந்தியத்தையும் தீப்பொறி போல வெடிக்க செய்யும் என்று கலிபாஃப் தெரிவித்துள்ளார். மேலும் அமெரிக்கா மற்றும் அதன் கூட்டாளிகளின் தளங்கள் எந்தவிதத்திலும் பாதுகாப்பாக இருக்காது என அவர் கூறினார். இதற்கு முன்பு ட்ரம்பின் நடவடிக்கையை ஏமாற்று வேலை என கமேனி விமர்சித்திருந்தார்.
ஏற்கனவே ஈரான் வெளிவிவகார அமைச்சர் அப்பாஸ் அராக்கி, அமெரிக்காவின் அதிகபட்ச அழுத்த கொள்கை மாற்றப்படாவிட்டால் பேச்சுவார்த்தை நடத்த முடியாது என்று வியாழக்கிழமை தெரிவித்தார். அதோடு ட்ரம்பின் கடிதத்தை ஈரான் முழுமையாக ஆராய்ந்ததாகவும் ஓமன் வழியாக அதற்கேற்ப ஒரு பொருத்தமான பதிலை அனுப்பியதாகவும் அவர் கூறியுள்ளார்.