உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி பதவி விலக வேண்டும் என்று ரஷ்யா அதிபர் விளாடிமிர் புடின் தெரிவித்துள்ளார். மேலும் போர் நிலவரத்தில் ரஷ்யா முழுமையாக முன்னிலையில் இருப்பதாகவும் இதற்குப் பிறகு உக்ரைனில் எதிர்ப்புகளை முற்றிலும் அழிக்க முடிவெடுத்திருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
புடின் அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல் ஒன்றை ஏவுவதற்காக சென்றிருந்தபோது உக்ரைனை ஐக்கிய நாடுகள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்து, புதிய திறமையான அரசாங்கத்தை உருவாக்க வேண்டும் என்றும் பரிந்துரைத்துள்ளார். அதே நேரத்தில் தனது பதவிக்காலம் முடிந்திருந்தும் ஆட்சியில் தொடரும் ஜெலென்ஸ்கிக்கு எந்த சமாதான ஒப்பந்தத்திலும் கையெழுத்திட சட்டபூர்வமான அதிகாரம் இல்லை என்றும் விமர்சித்துள்ளார்.
ஆனால் உக்ரைன் அரசியலமைப்பின்படி இராணுவச் சட்டம் அமலில் இருக்கும் நேரத்தில் தேர்தல் நடத்த முடியாது. மேலும் ஜெலென்ஸ்கி இன்னும் மக்கள் ஆதரவை கொண்டிருக்கிறார். போர் காரணமாக ஐந்து மில்லியன் மக்கள் வெளிநாட்டில் தஞ்சமடைந்திருப்பதால் ஒரு முறையான தேர்தல் நடத்த முடியாத நிலை உள்ளது. இன்னும் பல லட்சம் மக்கள் போரில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த சூழலில் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் முயற்சிக்கும் அமைதி பேச்சுவார்த்தையை தாமதப்படுத்தும் நோக்கில் முக்கியத்துவமற்ற காரணங்களை புடின் முன்வைக்கிறார் என்று உக்ரைன் குற்றஞ்சாட்டியுள்ளது. புடினின் கருத்துகள் ரஷ்யா அமைதிப் பேச்சுவார்த்தையில் தீவிரமாக இல்லை என்பதை உறுதிப்படுத்துவதாக ஜெலென்ஸ்கியின் முக்கிய அதிகாரி ஆண்ட்ரி யெர்மக் தெரிவித்துள்ளார்.
இதனிடையே உக்ரைனின் ஆட்சியை அதன் அரசியலமைப்பு மற்றும் மக்கள் தீர்மானிப்பார்கள் என்பதையே அமெரிக்காவின் வெள்ளை மாளிகை வலியுறுத்தியுள்ளது.