மியன்மரில் நேற்று (28) ஏற்பட்ட நில அதிர்வின் விளைவாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,002 ஆக உயர்ந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கிடையில் 2,376 பேர் காயமடைந்துள்ளனர்.
மியான்மர் மற்றும் தாய்லாந்தில் அடுத்தடுத்து கடுமையான நிலநடுக்கங்கள் ஏற்பட்டன. மியான்மரின் மாண்டலே அருகே முதலில் 7.7 ரிச்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. சிறிது நேரத்தில் 6.4 ரிச்டர் அளவில் மேலும் ஒரு நிலநடுக்கம் பதிவாகியது. இந்த அதிர்வுகள் வியட்நாம், மலேசியா, பங்களாதேஷ், மற்றும் இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களிலும் உணரப்பட்டன.
நிலநடுக்கம் காரணமாக மியான்மர் மற்றும் தாய்லாந்தின் பல்வேறு இடங்களில் கட்டிடங்கள் இடிந்து விழுந்தன. குறிப்பாக தாய்லாந்து தலைநகர் பாங்கொக்கில் புதிதாக கட்டப்பட்டுக் கொண்டிருந்த ஒரு கட்டிடம் இடிந்து விழுந்ததில் அதில் பணியாற்றிய ஏராளமான ஊழியர்கள் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
மியான்மரின் மாண்டலே நகரில் உள்ள ஒரு மசூதி இடிந்து விழுந்ததில் சுமார் 20 பேர் உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கிடையில் கட்டிடங்கள் இடிந்து விழுந்தபோது பதிவு செய்யப்பட்ட வீடியோக்கள் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளன.
இடிபாடுகளில் சிக்கி காணாமல் போனவர்களை மீட்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மீட்பு நடவடிக்கைகள் தொடர்ந்தும் வேகமாக நடைபெற்று வருகின்றன.