அமெரிக்க அரசின் செலவினங்களை குறைக்கும் நோக்கில் அமைக்கப்பட்ட சிறந்த நிர்வாகத்திற்கான துறை தலைவர் பதவியில் இருந்து வரும் மே மாதத்திற்குள் விலக உள்ளதாக எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க அதிபர் தேர்தலின்போது குடியரசு கட்சி சார்பில் களமிறங்கிய தற்போதைய அதிபர் டிரம்ப்பிற்கு ஆதரவாக எலான் மஸ்க் பிரசாரம் செய்தார். டிரம்ப் பதவியேற்ற பிறகு அரசின் செலவினங்களை கட்டுப்படுத்த புதிய நிர்வாக துறை உருவாக்கப்பட்டு அதற்கு தலைவராக எலான் மஸ்க் நியமிக்கப்பட்டார். அவரின் பணிக்காலம் 130 நாட்கள் எனத் தீர்மானிக்கப்பட்டு செலவுகளை குறைப்பதற்கான பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டார்.
அரசின் செலவுகளை கட்டுப்படுத்தும் முயற்சியின் ஒரு பகுதியாக வெளிநாடுகளுக்கான நிதியுதவியை நிறைவு செய்யவும் அரசு ஊழியர்களை குறைக்கவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. இதற்காக மஸ்க்கு ஆதரவும் கடும் எதிர்ப்பும் ஏற்பட்டுள்ளது. இந்த முடிவுகளால் டெஸ்லா நிறுவன பங்குகள் கடுமையாக வீழ்ச்சி கண்டுள்ளன. இதன் விளைவாக அமெரிக்காவின் பல்வேறு மாகாணங்களில் டெஸ்லா விற்பனை நிலையங்கள் முற்றுகையிடப்பட்டு போராட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன.
இந்த சூழ்நிலையில் எலான் மஸ்க் அரசு செலவுகளை நாளொன்றுக்கு 4 பில்லியன் அமெரிக்க டாலர் வரை குறைக்கும் முயற்சி மேற்கொண்டு, குறித்த 130 நாட்களுக்குள் முக்கிய பணிகளை நிறைவு செய்ததாக தெரிவித்துள்ளார். தேவையற்ற செலவுகளை குறைத்தும் முறைகேடுகளை கண்டறிந்து நிறுத்தியதன் மூலம் அவர் தனது பணி வெற்றிகரமாக முடிவடைந்ததாக கூறினார். இதனைத் தொடர்ந்து மே மாதத்தில் தனது பதவியிலிருந்து விலகலாம் என தெரிவித்துள்ளார்.