சிறிலங்கா பொதுஜன பெரமுன தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச எம்.பி. 2029 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் ஆட்சியை மீண்டும் கைப்பற்றுவோம் என தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை அம்பாந்தோட்டையில் உள்ளூராட்சி மன்ற வேட்பாளர்களுடன் கலந்துரையாடும்போது கூறினார்.
அவர் மேலும் 2018ஆம் ஆண்டு நடந்த உள்ளூராட்சி தேர்தலில் அவர்கள் பல பகுதிகளில் வெற்றி பெற்றதை நினைவூட்டினார். எதிர்வரும் உள்ளூராட்சி தேர்தலிலும் அதிகளவான அதிகார சபைகளை கைப்பற்றுவோம் எனவும், கிராமிய பொருளாதாரத்தின் மேம்பாடு தேசிய பொருளாதாரத்தை பலப்படுத்தும் எனவும் தெரிவித்தார்.
அவர் தெரிவித்ததாவது கடந்த ஆட்சியில் கிராமிய பொருளாதாரத்தை மேம்படுத்த பல திட்டங்களை செயல்படுத்தியதாகவும், அதனாலேயே மக்கள் மீண்டும் அவர்களின் அதிகாரத்தை ஒப்படைப்பார்கள் என உறுதியாக நம்புவதாகவும் கூறினார். அதே நேரத்தில் தேசிய மக்கள் சக்தி (NPP) தேர்தல் காலத்தில் பல வாக்குறுதிகள் அளித்த போதிலும் எந்த ஒரு திட்டமும் நடைமுறைப்படுத்தப்படவில்லை என விமர்சித்தார்.
நமது பொருளாதாரத்தை நவீனமயமாக்குவதே முக்கியம் என கூறிய அவர், விவசாயம் மற்றும் கிராமிய பொருளாதார மேம்பாட்டிற்காக பல திட்டங்களை முன்னெடுத்த போதும் மக்கள் விடுதலை முன்னணி (JVP) அவற்றிற்கு எதிர்ப்பு தெரிவித்ததாக குற்றம்சாட்டினார்.
அரசின் திட்டங்களை எதிர்க்கட்சிகள் ஆதரிக்க வேண்டும் என்று இப்போது அழைப்பு விடுக்கப்படுகிறதா? ஆனால் கடந்த காலங்களில் அரசின் அனைத்து நடவடிக்கைகளுக்கும் எதிராக போராட்டம் நடத்தியது இன்றைய ஆளுங்கட்சியே என அவர் விமர்சித்தார். தற்போதைய அரசு ஆறு மாத காலம் முடிந்திருந்தாலும் எந்த புதிய திட்டங்களும் இதுவரை செயல்படுத்தப்படவில்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.