மியான்மரில் நடந்த சக்திவாய்ந்த நிலநடுக்கம் பெரும் உயிரிழப்புகளை ஏற்படுத்தியுள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை 7.7 ரிக்டர் அளவிலும் பின்னர் 6.4 ரிக்டர் அளவிலும் இரண்டு முறை நிலநடுக்கம் ஏற்பட்டது. மியான்மரின் சாகைங் நகரிலிருந்து 16 கிலோமீட்டர் தொலைவில் 10 கிலோமீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கம் மிக மோசமானதாக இருந்ததாகவும் பெரும் சேதங்களை ஏற்படுத்தியிருக்கலாம் என்றும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10,000-ஐ கடக்கலாம் என அமெரிக்க புவியியல் ஆராய்ச்சி நிறுவனம் (யூஎஸ்ஜிஎஸ்) அச்சம் வெளியிட்டது.
நிலநடுக்கம் நடந்த மூன்று நாட்களுக்கு பிறகு அதிர்ச்சியூட்டும் தகவல் வெளியாகியுள்ளது. ரமலான் கடைசி வெள்ளிக்கிழமை சிறப்பு தொழுகையில் இருந்த 700க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் நிலநடுக்கத்தால் ஏற்பட்ட கட்டிட இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்துள்ளதாக மியான்மர் முஸ்லிம் அமைப்பு தெரிவித்துள்ளது.
மியான்மரின் இரண்டாவது பெரிய நகரமான மண்டலே அருகே 7.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டபோது சுமார் 60 மசூதிகள் சேதமடைந்ததாகவும் தொழுகையில் ஈடுபட்டிருந்த 700 இஸ்லாமியர்களின் நிலை கேள்விக்குறியாகி இருப்பதாகவும் தகவல் வெளியானது. இவர்களில் பலர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகின்றது.
தற்போது நிலநடுக்கத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,700 ஆக உயர்ந்துள்ளது. ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்பட்டு வரும் நிலையில் இந்த துயரமான செய்தி மியான்மர் மற்றும் உலகெங்கும் உள்ள மக்களை வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளது.