மும்பை விமான நிலையத்தில் உள்ள கழிவறையின் குப்பை தொட்டியில் குழந்தை ஒன்றின் உடல் கிடந்ததை துப்புரவு தொழிலாளி கவனித்துக்கொண்டு உயர் அதிகாரிகளுக்கு தகவல் வழங்கினார். இந்த சம்பவம் நான்கு நாட்களுக்கு முன்பு நடந்ததாக கூறப்படுகிறது.
இதனை தொடர்ந்து பொலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். விமான நிலையத்தில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது கழிவறையில் குழந்தையை பெற்றுக்கொண்ட பெண் யார் என்பதும் தெரியவந்தது. விசாரணையில் அந்த பெண் ராஞ்சி செல்லவிருந்த 16 வயது மைனர் பெண் என்பதும் உறுதியானது.
அந்த பெண்ணும் அவளின் தாயாரும் விமானம் புறப்படுவதற்கு இரண்டு மணி நேரத்திற்கு முன்பாகவே விமான நிலையம் வந்திருந்தனர். அப்போது மைனர் பெண்ணுக்கு வயிற்றுவலி ஏற்பட்டு கழிவறைக்கு சென்ற போது குறை பிரசவமாக குழந்தை பிறந்துள்ளது. இதையடுத்து குழந்தையின் உடலை குப்பை தொட்டியில் போடுவதற்கு அவளது தாயார் உதவி செய்துள்ளார்.
இதனால் மைனர் பெண்ணின் காதலன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. கழிவறையில் குழந்தையை பெற்ற பிறகு ஆடையை மாற்றிக்கொண்டு அவர்கள் அங்கிருந்து கிளம்பியதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
பெண்ணின் தாயார் “மகள் ஏழு மாத கர்ப்பமாக இருந்தது தெரியும், அதனால் உறவினர் வீட்டுக்குச் செல்ல ரயிலுக்கு பதிலாக விமானத்தில் சென்றோம்” என கூறியுள்ளார். இதனைத் தொடர்ந்து பொலிஸார் இருவரின் வாக்குமூலங்களை பதிவு செய்துவிட்டு அவர்களை வீட்டிற்கு அனுப்பி வைத்தனர்.