கனடாவின் கிரேட்டர் டொரான்டோ பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ கிருஷ்ணா பிருந்தாவனம் கோயில் சேதப்படுத்தப்பட்டுள்ள சம்பவத்தில் தொடர்புடையவர்களை கண்டுபிடிக்க கனடா பொலிஸார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகள் மூலம் சந்தேகிக்கப்படும் இரு ஆண்கள் கோயிலுக்கு செல்வதற்கு முன் அருகிலுள்ள ஒரு மதுக்கூடத்துக்கு சென்றிருந்தது தெரியவந்துள்ளது. அவர்கள் கோயிலின் நுழைவாயிலில் சேதம் ஏற்படுத்தியிருந்தனர். ஆனால் அவர்கள் ஹூடி அணிந்திருந்ததால் முகம் தெளிவாக பதிவாகவில்லை.
இந்தச் சம்பவம் ஹிந்துக்களுக்கு எதிரான வெறுப்பு குற்றச் செயலாக இருக்கக்கூடும் எனவும் இவ்வகையான தாக்குதல்கள் கனடாவில் அதிகரித்து வருவதாகவும் கனடா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும் இந்த சம்பவத்தை கண்டித்துள்ள ஹிந்து கனேடிய அறக்கட்டளை இந்த தாக்குதல் சமூக நல்லிணக்கத்துக்கே பெரிய அச்சுறுத்தலாக இருப்பதாகக் கூறியுள்ளது.