டெஸ்லா நிறுவனத்தின் நிதி மற்றும் வணிக நடவடிக்கைகளின் துணைத் தலைவர் ஸ்ரீல வெங்கடரத்தினம், 11 ஆண்டுகள் பணியாற்றிய பிறகு, தனது வேலையை விட்டு விலகியுள்ளார். மேலும் எலோன் மஸ்கின் கீழ் பணியாற்றுவது “நரகம்” என்று வெளிப்படையாக தெரிவித்துள்ளார். இந்த தகவல் தொழில்நுட்ப உலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
டெஸ்லா நிறுவனத்தின் தற்போதைய சந்தை மதிப்பு 779.33 பில்லியன் அமெரிக்க டொலராக உள்ளது. ஒரு பங்கின் மதிப்பு 5.27% அதிகரித்து 248.71 அமெரிக்க டொலராக வளர்ந்துள்ளது. ஜனாதிபதி டொனால்டு ட்ரம்ப் நிர்வாகத்தில் ஏற்பட்ட மாற்றங்களால், எலோன் மஸ்க் பல கடுமையான நடவடிக்கைகளை எடுத்திருக்கிறார். இதனால், அமெரிக்காவின் பல பகுதிகளில், டெஸ்லா வாகனங்கள் மற்றும் வணிக மையங்கள் மீது மக்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தி வருகின்றனர்.
டெஸ்லாவின் கடுமையான பணிச்சூழலுக்கு எலோன் மஸ்க் முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறார். இதனால், கடந்த சில மாதங்களில் டெஸ்லா நிறுவனத்தில் இருந்து பல முக்கிய நிர்வாகிகள் விலகியுள்ளனர். அந்த தொடர்ச்சியாகவே, ஸ்ரீல வெங்கடரத்தினமும் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
டெஸ்லாவில் இருந்து விலகிய பிறகு, அவர் வெளியிட்ட அறிக்கையில், “இளகிய மனம் படைத்தவர்கள் டெஸ்லாவில் பணியாற்ற முடியாது” என்று கூறியுள்ளார். மேலும், தற்போது அவர் சுதந்திரமாக உணர்கிறார், குடும்பத்தினருடன் அதிக நேரம் செலவிட முடிகிறது, நண்பர்களை மீண்டும் தொடர்புகொள்கிறார், உடல்நலத்தை கவனிக்க நேரம் கிடைக்கிறது என தெரிவித்துள்ளார்.
2013ல், டெஸ்லாவின் நிதி செயல்பாடுகளின் இயக்குநராக அவர் சேர்ந்தார். தனது கடும் உழைப்பால், 2019ல் துணைத் தலைவராக பதவி உயர்வு பெற்றார். ஜூன் 2024ல் அவர் டெஸ்லாவை விட்டு வெளியேறினார். இவர் பணியாற்றிய காலத்தில், Model S, Model X, Model 3, Model Y, Cybertruck போன்ற முக்கிய வாகனங்கள் உருவாகப் பெரிய பங்கு வகித்தார். அத்தோடு, எரிசக்தி உற்பத்தி முயற்சிகளிலும் அவரின் முக்கிய பங்களிப்பு இருந்தது. நிதித் துறையில் பல்வேறு பட்டங்களை பெற்றுள்ள இவர், தற்போது தனது வாழ்க்கையில் புதிய பாதையை தேர்ந்தெடுக்க முயலுகிறார்.