காட்டு யானைகள் ரயிலில் மோதுவதை தடுப்பதற்காக, செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தைக் கொண்ட புதிய உபகரணத்தை பரிசோதிக்க போக்குவரத்து மற்றும் பெருந்தெருக்கள் அமைச்சு தீர்மானித்துள்ளது.
இந்த உபகரணம் பொருத்தப்பட்ட முதல் ரயில் நாளை மறுதினம் கொழும்பில் இருந்து மட்டக்களப்புக்கு இயக்கப்படவுள்ளதாக பிரதியமைச்சர் டொக்டர் ப்ரசன்ன குணசேன தெரிவித்தார். பரிசோதனை வெற்றியடையுமானால், மட்டக்களப்பு மார்க்கத்தில் இரவு சேவையில் இயங்கும் அனைத்து ரயில்களிலும் இந்த உபகரணம் பொருத்தப்படவுள்ளது.
இந்த ஆண்டில் மட்டும் 9 யானைகள் ரயில்களில் மோதிச் உயிரிழந்துள்ளன. குறிப்பாக, கல்ஓய – பளுகஸ்வெவ இடையிலான 20 கிமீப் பகுதியில் யானைகள் ரயிலில் மோதும் அபாயம் அதிகம் காணப்படுவதாக பிரதியமைச்சர் டொக்டர் ப்ரசன்ன குணசேன தெரிவித்தார்.
இந்த உபகரணத்தை பேராதனை பல்கலைக்கழக பொறியியல் பீட பேராசிரியர் லிலந்த சமரநாயக்க தலைமையிலான குழு உருவாக்கியிருக்கிறது. கலாநிதி தரிந்து வீரகோன், நலீன் ஹரிஸ்சந்திர, பேராசிரியர் காமினி திசாநாயக்க உள்ளிட்ட பலரும் இதற்குப் பங்களிப்பினை வழங்கியுள்ளனர்.