நேபாளத்தில் தொடங்கி, இந்தியா வழியாக இலங்கை வரை நீண்டிருந்த பிரம்மாண்டமான சர்வதேச போதைப்பொருள் கடத்தல் நெட்வொர்க்கை இந்திய போதைப்பொருள் தடுப்புப் பிரிவு (NCB) அதிரடியாக முறியடித்துள்ளது. சுமார் 10 கோடி ரூபாய் மதிப்பிலான போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ள நிலையில், இந்த சம்பவத்தில் தொடர்புடைய 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த மார்ச் 3-ம் தேதி, தெலுங்கானா மாநிலம் பெங்களூரு – ஹைதராபாத் நெடுஞ்சாலையில், ‘ரைகல்’ சுங்கச்சாவடி அருகே ஒரு சொகுசு காரை NCB அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர். தீவிர சோதனைக்கு உட்படுத்தப்பட்ட அந்த காரில், ரகசிய அறைகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 2 கிலோ ‘சராஸ்’ (Charas) போதைப்பொருள் கண்டெடுக்கப்பட்டது. இது தொடர்பாக டெல்லி மற்றும் உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்டவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், இந்த கடத்தல் சம்பவம் வெறும் ஆரம்பம்தான் என்பது தெரியவந்தது. நேபாளத்தின் காத்மாண்டுவிலிருந்து சொனாலி எல்லை வழியாக இந்த போதைப்பொருட்கள் இந்தியாவுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளன. மேலும், சுமார் 78 கிலோ ஹஷிஷ் ஆயில் (Hashish Oil) தூத்துக்குடிக்கு ஏற்கனவே அனுப்பப்பட்டிருப்பது அதிகாரிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
கிடைத்த தகவலின் அடிப்படையில், உடனடியாகச் செயல்பட்ட NCB-யின் சென்னை மண்டலப் பிரிவு, தூத்துக்குடியில் முகாமிட்டு அந்தப் பெரும் போதைப்பொருள் சரக்கைக் கைப்பற்றியது. இந்தச் சரக்கை மீன்பிடி படகு மூலம் சர்வதேச கடல் எல்லைக்குக் கொண்டு சென்று, அங்கிருந்து இலங்கை நாட்டைச் சேர்ந்த ஒருவருக்குக் கைமாற்றத் திட்டமிட்டிருந்தது தெரியவந்தது.
இதனைத் தொடர்ந்து இந்திய கடலோர காவல்படையின் உதவியுடன், கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட அந்த மீன்பிடி படகும் தடுத்து நிறுத்தப்பட்டு, மூன்று பேர் கைது செய்யப்பட்டனர். இதில் இலங்கையைச் சேர்ந்த அகதி ஒருவரும் அடங்குவார்.
இந்த சர்வதேச கடத்தல் நெட்வொர்க்கின் மூளையாக, இலங்கையில் தங்கியிருக்கும் ஒரு நபர் செயல்பட்டு வந்திருப்பது விசாரணையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. அவரே நேபாளத்திலிருந்து இந்தியா வழியாக இலங்கை வரை போதைப்பொருட்களைக் கொண்டு செல்வதற்கான நிதியுதவியையும், ஒருங்கிணைப்பையும் செய்துள்ளார்.
இதுகுறித்துத் தெரிவித்துள்ள NCB-யின் சென்னை மண்டல துணை இயக்குநர் ஆர். சுதாகர், “மூன்று நாடுகளை இணைத்து செயல்பட்ட இந்த சர்வதேச கடத்தல் சங்கிலியை நாங்கள் வெற்றிகரமாக உடைத்துள்ளோம்” என்று தெரிவித்தார்.
தற்போது இந்த கும்பலுடன் தொடர்புடைய மற்ற நபர்களைக் கண்டறியவும், இவர்களது பணப் பரிமாற்றங்கள் குறித்தும் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. இந்தியாவின் ‘போதைப்பொருள் இல்லா பாரதம்’ (Nasha Mukt Bharat) முன்னெடுப்பிற்கு இந்த நடவடிக்கை ஒரு முக்கிய மைல்கல்லாகப் பார்க்கப்படுகிறது.
